Thursday, January 7, 2016

My Baby


If you would like to read this in Tamil, you can read it here.


I had gone to Uthamapalayam, (a small village town) to visit my Brother in Law and his family with my five month old baby.

My Brother in law, Krishnamurthy, was a salesman for Brooke Bond Tea Company. He usually leaves at 4 in the morning to start his work.
Soon after he left for work, the baby had a high fever! So my Sister in Law, Kamala and me were so scared and called an elderly neighbour over to come and look at the baby.
She came over and looked at the baby and said, "nothing is wrong, don't worry!".
She asked us if we had 'Kasthoori Tablet' at home. We had it and brought it to her. She rubbed the baby's hands, feet and back with the oil and said he will be okay. But the situation got worse and at one point, the baby became cold!
Kamala and myself, started crying out loud! It was a quiet morning and the whole street heard our cries and every one came to the house, asking what happened!
Everyone had their own theories, as to how to cure the baby. One of them went and called a Doctor. His name was Dr. Sargunam. In those days, we didnt have pediatricians, just one doctor for everyone. Dr. Sargunam came right away amd took one look at the baby and said, "He's not doing very well. If you want to inform your relatives, please let everyone know. He will not survive for long!"

Hearing this, the neighbors started preparing the items needed for the funeral process. Kamala and myself were helpless and crying.

By this time, my youngest Brother in law, Gana, ran out of the house to call my Brother in law (Krishnamurthy) who was around 10 kms away,

Krishnamurthy, came cyclng back as fast as he could, with an old man, sitting behind him.

As soon as he came home, he took the baby in his lap and called that old man, "Paattaiya! Come her and look at this child!"

Pattaiya was a local painter who used to paint homes. He took a small box from his dhoti folds, opened it and took something out from that box with his finger and put it in the baby's throat.
Suddenly, the baby screamed out and vomited and started crying. Everyone was praising Pattaiya!
My Brother in law was so happy, he hugged Pattaiya, and said, "Pattaiya! Am so happy today! Ask me anything and I will give it to you!"
Pattiya replied, "Give me two rupees, *sami!"
He gave him 100 rupees!
and then he saw all the stuff that was ready for the funeral and shouted at everyone, "Please throw all this and go back to your homes!

I can never forget that day!
Pattaiya gave something called, "Kasthoori Mezhugu", a siddha medicine to the baby.

This happened in the year 1948.
That baby is now 68, and he is Janakiraman!!

*sami is like calling someone sir, with respect.

குழந்தையும், கஸ்தூரி மெழுகும்

The English Translation of this post can be read, here

உத்தம்பாளையத்தில் இருக்கும் என்  மைத்துனர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது என் ஐந்துமாத  குழந்தைக்கு திடீரென்று காய்ச்சல். காலை நாலுமணி இருக்கும் . என் மைத்துனர் ப்ரூக் பாண். டீ ஸேல்ஸில்  வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அவர் தினமும் காலை 4 மணி வாக்கில் ட்யூட்டிக்கு கிளம்பிவிடுவார் . அவருக்கு அன்று, குழந்தைக்கு காய்ச்சல் , என்பது தெரியாது. அவர் போனபின்பு குழந்தையின் உடம்பு  திடீரென்று ஜில்லிண்டாகிவிட்டது, என் மைத்துனர் மனைவி. கமலாவும், நானும் பயந்து பக்கத்து வீட்டில்  உள்ள, என் பெரியம்மாவை  துணைக்கு அழைத்தோம். 

அவர் வந்து பார்த்துவிட்டு, "ஒண்ணுமில்லை. பயப்படாதே!",என்று சொல்லி விட்டு, "கஸ்தூரி மாத்திரை இருக்கா?" என்றார். 
 கஸ்தூரி மாத்திரை, இருந்தது. கொண்டு வந்து குடுத்தேன்.
 அதை பாலில் கரைத்து பாலாடையால் குழந்தைக்கு போட்டி, பிறகு குழந்தைக்கு நெஞ்சு முதுகு எல்லாம் குரு தைலம் தடவினார். ஆனால் எந்தவித முன்னேற்றமுமில்லை , நிலமை ரொம்ப மோசமாகி விட்டது. 

நானும் கமலாவும ஓ....என்று பெரிதாக,சத்தமாக அழ,  அது காலை வேளையில் ஊர் முழுக்க கேட்க, ஊரே, கூடம் முழுதும் கூடிவிட்டது!! 

எல்லாரும் என்ன! ஏது! என்று பரபரக்க ஆளுக்கு ஒரு வைத்தியம் சொல்ல, (அந்த காலத்தில் phone)வசதி கிடையாது,  குழந்தை வைத்தியரும் கிடையாது, பக்கத்தில் சற்குணம் என்ற சாதாரண டாக்டர், எல்லா உடல் கோளாறுக்கும் வைத்தியம் பார்ப்பவர். 
அவரை, வந்த கூட்ட த்தில் ஒருவர், போய் அழைத்து வந்தார்,

அவர் வந்து குழந்தையை தொட்டுப்பார்த்து விட்டு சிறிது யோசனையுடன்  என்னைப்பார்த்தார், பிறகு, "அம்மா! குழந்தைக்கு உடல்நிலை ரொம்ப மோசமாகத்தான் இருக்கு. யாருக்காவது தகவல் சொல்லவேண்டியிருந்தால் , சொல்லி அனுப்புங்கள்!" , என்று சொல்லிவிட்டு போய்விட்டர்!

உத்தம்பாளையம் என் பாட்டியின் ஊர். நாங்கள் எல்லாரும் வளர்ந்த சொந்த ஊர். அதனால், அக்ரஹாரமே கூடி விட்டது. 

 இதன் நடுவில் என் கடைசி கொழுந்தன் கணா, பக்கத்தில் பத்துமைலுக்குள் டீகடைகளுக்கு டீ பாக்கெட் சப்ளை செய்யபோயிருந்த மைத்துணரை அழைத்துக்கொண்டு வர போய்விட்டான், அதற்குள், கூடியிருந்த கூட்டத்தில், சிலர், குழந்தையை எடுப்பதற்கு தேவையான சாமான்களுடன்  தயாராக இருக்க, என் மைத்துனர் வேகவேகமாக சைக்கிளில் பின்னால் ஒரு வயதான கிழவருடன் வந்து இறங்கினார் . 
அவர் யாரையும் கவனிக்கவில்லை. நேராக குழந்தையிடம்  வந்து, குழந்தையை தூக்கி மடியில் வைத்துக்கொண்டு, ,கூட வந்த கிழவரை, "பாட்டையா!! குழந்தையைப்பாரு!!" என்றார் . 

பாட்டையா என்பவர், வீடுகளுக்கு சுண்ணாம்பு அடிப்பவர் ,
அவர் ஒரு அழுக்கு வேஷ்டியை கட்டிக்கொண்டு இருந்தார். 
மேலே உடம்பில் சட்டை இல்லை, என் கொழுந்தர் "குழந்தையை பாரு", என்ற உடன் தன் இடுப்பில்  உள்ள அழுக்கு வேஷ்டியிலுள்ள, மடிப்பிலிருந்து ஒரு குழாய் போன்ற சின்ன, தகர டப்பாவை எடுத்து  திறந்து, அதிலிருந்த மருந்தை கொழுந்தர் மடியிலள்ள குழந்தையின் வாய்க்குள் அதாவது, (தொண்டைக்குள்) தன் ஆள்காட்டி விரலில் உள்ள  மருந்தை வலுக்கட்டாயமாக செலுத்தினார்!!!

அந்தக்க்ஷணமே, குழந்தை குபீரென்று ஓரே கோழையாக வாந்தி எடுத்து, உடனே அழத்தொடங்கியது!!

கொழுந்தர் உடனே எழுந்து பாட்டையாவை கட்டிக்கொண்டு, "உனக்கு என்னவேணாலும் கேளு இப்பவே தரேன்!"  என்றார்  பாட்டையா, "எனக்கு ரெண்டு ரூபா குடு  சாமி, போதும்!" என்றார்!

பிறகுதான் வாசலில் உள்ள  சாமான்களை பார்த்தார். மைத்துனருக்கு கோபம் வந்துவிட்டது. "எல்லாரும் மொதல்ல வெளியே இருக்கிறதைதூக்கப் போட்டுட்டு  வெளியே போங்க" என்று சத்தம் போட்டார். 

எல்லாரும் போனவுடன் எங்களை கோபித்துக்கொண்டார். "நான் வருவதற்குள் இப்படியா ஊரைக்கூட்டுவது? கணாதான் உடனே வந்து, தகவல் சொல்லி, வருவதற்குள் என்ன அவசரம்?   நல்ல வேளை! எல்லாம் நல்லதாக முடிந்தது!"  என்று சொல்லி பாட்டையாவுக்கு. நூறு ரூபாய் கொடுத்தார்!!

அந்தநாள் எனக்கு மறக்கமுடியாத நாள் .

இதெல்லாம் நடந்தது 1948ல்!!

இப்பொதுஅவனுக்கு வயது 67.

பாட்டையா குழந்தைக்கு கொடுத்த மருந்து, கஸ்தூரி மெழுகு ..........😅😅😅😅😅

அவன் தான்  ஜானகிராமன்!!!!

Thursday, September 17, 2015

நினைவுகள் - தகவல் பரிமாற்றம் - இது அந்தக் காலம்.

ஒன்பது  மணியாச்சே..இன்னும் ஏன் போஸ்டுமேன் வரக்காணும் 
என்று  அந்த காலத்தில், போஸ்ட்மேனை எதிர் பார்ப்பார்கள்.  அப்போதெல்லாம்,தபால்  மூலமாகத்தான் 
சகல விஷயங்களையும் அறிந்து கொள்ளமுடியும். 
தினமும் காலை,மதியம்,மாலை மூன்று வேளையிலும் தபால் வரும் .                       

விகடன்,கல்கி,சுதேசமித்திரன்,போன்ற பத்திரிகைகள்,
தபால் மூலமாக வரும். அந்த பத்திரிகைகள் வரும் நாட்களில் 
தபாலை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.பரிட்சை ரிசல்ட்,
கார்டில் வரும். குழந்தைகள் டென்ஷனுடன் உள்ளுக்கும்
வாசலுக்குமாக நடந்து வண்ணமிருப்பார்கள் .                                                       


ஏம்மா ஓரு காலணா கார்டுலே ,
நாலுவரி நான் சௌக்யம்னு எழுதக்கூட நேரமில்லையா ?
என்று பெற்றோர்கள் கேட்பதுண்டு. 
கார்டு காலணா,கவர் ஒண்ணரையணாதான். 
கடிதத்தை எழுத, 
"முதலில் அன்புள்ள அம்மாவுக்கு.அநேக நமஸ்காரங்கள் "
என்று ஆரம்பிக்கும்.
அப்பா அண்ணா  இந்த மாதிரி எல்லாருக்கும்
கடிதம் எழுதிமுடித்து கடைசியில் "தங்கள்அன்புள்ள" என்று  முடியும் . 
அன்புள்ள என்று. ..எழுதும்போதே  நிஜமான ஆசை  மனதில்  எழும் .        
அதை கடிதம் எழுதின பழக்கம் உள்ளவர்கள் அறிவார்கள்.

தவிர மணியாடர் அப்பவெல்லாம் பணம் அனுப்ப அதுதான் வழி.                        மத்யானம்  ஒண்ணரை மணிவாக்கில், மணியாடர் வரும் .
பண்டிகை பருவங்களில் பெண்களுக்கு பிறந்த  வீட்டிலிருந்து  
பொங்கல், தீபாவளி இது  மாதிரி  விசேஷங்களுக்கு  
அந்த மணியாடர், வரும் வரையிலும் இந்த பெண்களுக்கு    
வேறு வேலையே ஓடாது. ஐந்தோ. ஆயிரமோ எது வானாலும்   
பிறந்த வீட்டுப்பணம் வந்த,பெருமை பொங்க இருப்பார்கள்.
காலேஜுக்கு பீஸ் கட்டுவது,அப்பாவுக்கு ,பிள்ளைகள் பணம்  அனுப்புவது ,                 சகலத்துக்கும், அதுதான் வழி.
மணியாடர் பாரத்தில் இருக்கும் இத்துனூண்டு இடத்தில்  
நுணிக்கி நுணிக்கி ஒருமூட்டை சமாசாரங்கள் எழுதி இருப்பார்கள்.  
அவசரத்துக்கு தந்தி மணியார்டர் என்று வேறு இருந்தது .                   


அப்போதெல்லாம்   அவசர   செய்திகளுக்கு தந்திதான்.
இரவு பகல் என்று  எந்த நேரமும் வரும் .
தந்தி என்ற  உடன்,அதுவும் இரவு நேரம் தந்தி  வந்தால்.  
என்னவோ ஏதோ என்று பயம் உண்டாகும்.

போஸ்ட்மேன்,மணியாடர்கொண்டு வருபவர் எல்லாம்  
ரொம்ப பழக்கமானவர்களாக சிநேகிதமாக இருப்பார்கள்.
எல்லாரும் எல்லாருடனும் சகஜமாக பேச பழக இருப்பார்கள்.
இப்பவெல்லாம்  ஆளுக்கு ஒரு கைபேசி. ஐந்து வயது குழந்தை
உள்பட வீட்டில்   உள்ளவர்களுடன் பேசவே   நேரமில்லாமல்  கைபேசியுடன்,சதாபேசியபடி இருக்கிறாகள்.
இதெல்லாம் இப்போது அவசியமானதாக ஆகிவிட்டது .



அப்பவெல்லாம் . தினமும் யாரிடமிருந்தாவது , கடிதம் வந்து கொண்டிருக்கும்.வந்த,
கடிதங்களை வீட்டில் உள்ள அத்தனை பேரும் ஏதோ கதைபோல் படித்து,  
அதைப்பற்றிய விமர்சனம் வேறு நடக்கும்.பதிலும் உடன் எழுதிவிடுவோம்.
எழுதியதையும்,எல்லாரும் படித்த பின்புதான் 
போஸ்ட் பண்ணவிடுவார்கள்.தபால் என்பது ,அவ்வளவு ஸ்வாரஸ்யமானவிஷயம்.கடிதம். 
எழுதும்போது  ரொம்ப ஆர்வமாக எழுதுவோம் . மனதில் உள்ளதையெல்லாம்,
கடிதம் எழுதும்போது மறைக்க வராது,கை தானாகவேmஎழுதிவிடும்.
நம் உள்ளக்கிடக்கைகளை,கடிதம்   மூலமாக எழுதி  தெரிவிப்பதுபோல் 
கைபேசியில்  பேச முடியாது மனது  தடுக்கும். எழுதும்போது,  
 மனது  விசாலமாக இருக்கும்.நிறைய   கற்பனைகள் ஊறும் அழகாக விஷயத்தை,
சொல்ல முடியும் .இதுதான் கடிதம் எழுதுவதிலுள்ள சௌகர்யம்.
நான்  நிறைய கடிதங்கள். பக்கம் பக்கமாக எழுதியிருக்கேன். 
எந்த ஊருக்கு. போனாலும் அதுபற்றி அங்கு தடந்த ஸ்வாரஸயமான விஷயங்கள், 
என்றல்லாம்எழுதுவேன் . என் மாமாஅந்த காலத்தில் கொஞ்ச நாள்   
ஊட்டியில்   மின்சார இலாகாவில்   வேலை பார்த்தார். அப்போது வாரம்இரண்டு , 
மூன்று கடிதம் எழுதுவார்.அந்த கடித்தில் 
ஊட்டியைப்பற்றி அவ்வளவு அழகாக. வர்ணித்து  எழதுவார்  
கையெழுத்து ஒரே  மாதிரி   அச்சுக்கோத்தாப்போல இருக்கும்.   
அந்த கடிதங்களை  எல்லாம், இப்போது சேர்த்து படித்தால். 
கதைமாதிரி இருக்கும். அதையெல்லாம்  அருமை தெரியாமல்  
தொலைத்து விட்டோம்.இப்பொழது கடிதங்கள் எழுதுவதே 
தொலைந்து   விட்டது .இது    மாதிரி  நிறைய   
பழைய  விஷயங்கள்,நிறைய  வார்த்தைகள்,எல்லாம்  
இப்போது இல்லை .நினைவுகள்   நிறைய  வருகிறது.
- விமலா. பாட்டி.



Friday, February 13, 2015

என் முதுகில் மட்டைத் தேங்காய் விழுந்த கதை.

பெரியகுளத்தில் அநேகமாக எல்லா வீட்டின் கொல்லைப் புறங்களிலும்
தென்னை மரங்கள் இருக்கும். தேங்காய்கள் பறிக்க அடிக்கடி மரமேறிகள்
வருவார்கள்.அப்படி வந்தால்,'தேங்காய் பறிக்க வந்திருக்கேன்,
கொஞ்ச நேரம் பின் பக்கம் வராதீர்கள்' என்று தகவல், 
சொல்லி விட்டுத்தான் பறிப்பார்கள். இரண்டு பக்க வீடுகளுக்கும் சொல்வார்கள்.
எனக்கு இந்த  விபரம்  தெரியாது.

காலை வேளை எட்டு  மணி இருக்கும்.வீட்டின் உள்ளே எல்லாரும்    
டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.என் ஓர்ப்படி ஊரில் இல்லை.   
அதனால் என் மாமியார் எல்லாருக்கும் டிபன் பரிமாறிக் கொண்டு இருந்தார். 
நான் குழாயடியில் குனிந்து பாத்திரம் அலம்பிக் கொண்டிருந்தேன்.  

அப்போது திடீரென்று என் முதுகில் பெரிய மட்டைத்தேங்காய் டமால்   
என்ற சத்தத்துடன் விழுந்தது. 'ஓ'என்று அலறி விட்டேன். உள்ளே  இருந்து 
எல்லாரும் என்ன? என்ன?" என்று  ஓடிவந்தார்கள். என் பக்கத்தில் 
மட்டைத்தேங்காயை பார்த்த உடன் பயந்து விட்டார்கள். 

என் மாமியார் உடனே என் பக்கம் வந்து என் கையை  பிடித்து 
மெதுவாக நிற்க வைத்தார்.என்னால் நிமிர்ந்து நிற்கவே முடியவில்லை.
அந்த காலத்தில் நினைத்த நேரம் படுக்கையில் போய் படுக்கக்கூடாது.
முதலில் மடி,அடுத்து மரியாதை.  

அதனால் சமையலறைக்கு  எதிரே சற்றுத் தள்ளி உள்ள 
சாமான் உள் கூட்டிச் சென்றார்கள். சாமான்கள் உள் என்று பெயர்தான். 
அந்த  உள் ஜன்னலில்லாத காற்றே வராத இருட்டு அறை. 
கூடத்தில் உள்ள வெளிச்சம் அங்கே நன்னா வருமே என்பார் என்னுடைய மாமியார். 
அந்த உள்ளில் தேளெல்லாம் இருக்கும் என்று  நான் முடிந்த மட்டும் அங்கே     போகமாட்டேன். அங்கேயே என்னை அந்த வாசல் படியிலேயே தலை வைத்து  படுத்துக்கோ,இதோ வரேன் என்று போய் விட்டார்.     

எனக்கு தாங்க முடியாத வலி. அரை மணி நேரத்தில் ஒரு கிண்ணம் நிறைய செக்கச்   செவேல் என்று எதையோ துவையல் மாதிரி எடுத்து வந்தார்.என்னை திரும்பி குப்புற படுத்துக்கோ என்றார்.
முதுகு முழுக்க ஜில்லென்று அதை கனமாக அடை மாதிரி தட்டினார்.அப்படியே அசங்காம தூங்கு என்று  சொல்லிவிட்டு போய்விட்டார்.
முதுகில் அந்த பத்து உள்ளுக்குள் விர்ரென்று   இழுக்கிறது.நான் அப்படியே தூங்கி   விட்டேன்.

 மூணு மணி வாக்கில் வந்து சாப்பிடுவதற்கு எழுப்பினார்.ஸ்பெஷலாக ஏதோ மிளகு திப்பிலி என்று  போட்டு சூடாக ரசம் சாதம்  பண்ணி எனக்கு சாதம் போட்டார். நீ பாட்டுக்கு சாதாரணமாக இரு என்றார். எனக்கு முதுகெல்லாம் பிசுக்கென்று ஜில்லென்று ஒட்டிக்கிறதேஎன்றேன்.அது அப்படித்தான் இருக்கும். நாளை காலை வரை என்றார்.அன்று முழுக்க அவஸ்தைதான்.

மறு நாள் காலை நாலு மணிக்குஎழுப்பிவிட்டார்.வா,வெந்நீர் போட்டிருக்கேன்.சூடா விட்டு  முதுகை உருவி  விடறேன்.பத்தெல்லாம்  போயிடும்.வலியே இல்லாம சரியாகிவிடும் என்று சொல்லி துவைக்கும் கல்லில் என்னை உட்கார்த்தி சுடச்சுட வெந்நீர் விட்டு     முதுகை உருவி விட்டு குளிப்பாட்டினார்.குளித்த உடன் ஏதோ ஒரு லேகியமும்    கொடுத்தார். எனக்கு தேங்காய் விழுந்ததே மறந்து விட்டது. முதுகில் போட்டது  என்ன என்று கேட்டேன். சொன்னால் மருந்து பலிக்காது  என்றார்.

ரொம்ப வருஷம் ஆன பிறகு அந்த மருந்து என்ன என்று தெரிந்தது. 
அது என்ன தெரியுமா?
மணலில்லாத சுத்தமான செம்மண். கருப்பு முழு உளுந்து, புளி,மூன்றையும் அம்மியில் மைபோல் அரைத்து அடி பட்ட இடத்தில் மாவுக்கட்டு   போல போட்டிருக்கிறார்.அதை அம்மியில் அறைப்பது எவ்வளவு கஷ்டம்?

ஒரு மட்டைத் தேங்காய் என் முதுகில் விழுந்து பட்ட அடியில், எனக்கு என் மாமியாருக்கு, என் மேல் உள்ள அன்பும் அக்கறையும் புரிந்தது. கூடவே அவர்களின் கை வைத்தியத்தின் திறமையையும் தெரிந்து கொண்டேன்.

Wednesday, January 28, 2015

கோமதிப்பாட்டியும் ஊமைச் சங்கரனும்...

கோமதிப்பாட்டியும் ஊமைச் சங்கரனும்...

சாத்தூரில், நாங்கள் பத்து வருஷம் இருந்திருப்போம்.
அப்போதுதான், ஊமையும்,அவன் அம்மா
கோமதிப்பாட்டியும் எனக்கு பரிச்சயம் ஆனார்கள்.

ஊமையின் பெயரை யாரும் சொல்ல மாட்டார்கள். 
ஊமைய்யன் வரான் என்று சொல்வார்கள். வரும்போதே 
சத்தமாக , கத்திக்கொண்டே வார்த்தைகளில்லாத  சத்தத்துடன் 
கையைக்காலை ஆட்டிக்கொண்டு, ஒடி வருவான்.

ஊமை நல்ல சிவப்பாகவும்  ஆறடிக்கு குறையாத உயரமாகவும் இருப்பான். 
நெற்றியில் விபூதி இட்டு வேட்டியை முழங்காலுக்கு மேல் தார்பாய்ச்சிக் 
கட்டிக்கொள்வான். அதன்மேல்  இறுக்கமாக துண்டை பாட்டி கட்டி 
விடுவாள்.அவனுக்கு ஐம்பது வயது  இருக்கும். சற்று மனநிலை சரி  இல்லாதவன். 
குழந்தைகளை ரொம்ப பிடிக்கும் . அவனைக்கண்டால் குழந்தைகள் பயப்படும் .  

எல்லார் வீடுகளுக்கும் முக்கியமாக அக்ரஹாரத்து
மனிதர்கள் கிணற்று நீர்(உப்புத் தண்ணீர்),
குடிதண்ணீருக்கு, அவனைத்தான் நம்பி இருப்பார்கள்.

கிணறு எல்லா, வீடுகளிலும் வீட்டின் பின்னால் கடைக்கோடியில் இருக்கும்.   
துலாகிணறு. ஒரே உப்புத்தண்ணீர். குறைந்தது 40, 50 அடி ஆழத்தில்
தண்ணீர். பாரத்திற்கு மூங்கில் கழியில் கல்லைக்கட்டி,கல்தூண் மேல்
தாங்க வைத்து, இரும்பு சங்கிலி , இரும்பு வாளியுடன் 40,50 அடிக்கு
துலாவை இறக்கி, தண்ணீர் இறைக்கணும். 
அதை அந்தக் கோடியிலிருந்து இந்தக் கோடியில் உள்ள
அண்டா தொட்டிகளில் நிரப்பனும்.
அந்த துலாகல்லுடன் மூங்கில் கழியை,ஒரே அழுத்தில்,
கிணற்றுள்ளே அமுக்கி ரெண்டேஇழுப்பில் வாளியைதண்ணீருடன் இழுத்து 
ரெண்டு  கையிலும் பெரிய வாளிகளுடன் நடக்காமல் ஓடி ஓடி தண்ணீர் 
நிரப்புவான். பத்து  நிமிஷங்கூட ஆகாது அதற்கு. ஒரு தொட்டியோ 
அண்டாவோ நிரப்ப நாலணாதான். 

சாத்தூரில், நாங்கள் குடியிருந்த வீட்டின் பின்புறம் சற்று தள்ளித்தான் 
வைப்பாறு. படித்துறையில் சுமார் பத்து படிகள் உண்டு. அந்த ஆற்றில் 
காட்டாற்றுவெள்ளம் அடிக்கடி வரும். ஆற்றின்   நடுவில் எப்போதும்  
சிறிது தண்ணீர்போய்க் கொண்டு இருக்கும். அந்த ஊர் ஜனங்கள்அழகாக 
டிரஸ் பண்ணிக்கொண்டு ஆத்தங்கரையில் கூட்டம் கூட்டமாய்  உட்கார்ந்து 
ஆற்று மணலில் 2 அல்லது 3 அடி குழி தோண்டி உறை போட்டு 
குடம் குடமாக தண்ணீரை எடுத்துப்போவார்கள். குடம் வைக்க குழி,
உட்கார குழி , ஊற்றுக்கு குழி போட்டு, தண்ணீரை ஊத்துப்பட்டையால் 
தண்ணீர் கலங்காமல் சேந்தி எடுக்கவேண்டும். இது நல்ல குடி நீர்.

ஊமை அங்கிருந்து ஒருநாளைக்கு ஐம்பது குடங்களாவது எடுப்பான்.
எல்லா வீடுகளுக்கும் குடிநீர் கொண்டு செல்வான். 
ஒருகுடத்துக்கு நாலணா தருவார்கள். 

காசு பணம் பற்றி ஊமைக்கு தெரியாது. 
அவனுக்கு ஏன் இந்த வேலைகளைச் செய்கிறோம் என்றே தெரியாது.
பாட்டிதான் அவனை எல்லா  வேலைகளையும் செய்யப் பழக்கியிருந்தாள். 
அவன்தான் பாட்டிக்கு, சம்பாதித்து, பாட்டியும் அவனும் பிழைத்துக்கொண்டிருந்தார்கள்.
பாட்டிக்கு சிவன் கோவில் தெருவில்,  சின்னதாக ஒரு வீடு இருந்தது.
அதில் கீழே மூணு ரூபாய் மாதவாடகை வரும்.  
பாட்டி மாடியில் குடி இருந்தாள். அந்த காலத்தில் நாங்கள் இருந்த 
பெரிய வீட்டின் வாடகையே இருபத்தைந்துரூபாய் தான்.            

ஊமை காலை பத்து மணி வாக்கில் பாட்டியுடன்  தினமும் வருவான்.
அவனுக்கும் பாட்டிக்கும் தினமும் இட்லி, சாம்பாருடன் சாப்பிடத் தருவேன்.
ஏதோ  கத்திக்கொண்டே சாப்பிட்ட உடன் என் காலில் விழுந்து 
சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வான். அப்படி பண்ணாதே என்றால் கேட்க மாட்டான். 
உனக்கு இன்னும் தண்ணி எடுக்கவா ? எண்ணை தேய்ச்சுக்கோ.
நிறைய தண்ணீர் எடுக்கறேன் என்று சைகையால் அபிநயம் பிடித்துக் காட்டுவான். போதும் அப்பா என்று சொல்லி அனுப்புவதற்குள் சிரமமாகி விடும்.
தினமும் இட்லி தோசைக்கு மாவு அரைத்துக்கொடுப்பான்.
பாட்டி மாவை தள்ளிக்கொடுப்பாள். என்னிடம் நைசாக அரைச்சிருக்கேன்.
இட்லி பூவா இருக்கும் என்று சைகை செய்து தானே பெரிதாக சந்தோஷப்பட்டுக்கொள்வான். இந்தக்கால கிரைண்டரை விட வேகமாகவும் 
நன்றாகவும் சுத்தமாகவும் மாவு அரைத்துக்கொடுப்பான்.   
  
அவனுக்கு தீபாவளிக்கு வேஷ்டி துண்டு வாங்கிக் கொடுத்தால் 
வேஷ்டிக்கு முத்தம் குடுத்து, என் கணவர்  ஆபீஸுக்கு போகுமுன் விழுந்து கும்பிடுவான். 
தெருவில் எல்லோரிடமும் என் கணவரையும் வேஷ்டியையும் காண்பித்து குதிப்பான். 
பார்க்கும் பொழுது எல்லாம் விழுந்து கும்பிடுவான்.
ரொம்ப கஷ்டமாக இருக்கும் பார்ப்பதற்கு. 

நாங்கள் மதுரைக்கு மாற்றலாகி, வந்த 5 அல்லது 6 வருடங்களுக்கு பின், 
கோமதிப்பாட்டி எப்படியோ என்னைத்தேடி ,மதுரையில் எங்கள்  வீட்டுக்கு வந்துவிட்டாள் .
ஊமை எங்கே பாட்டி என்றதுமே, பாட்டி ரொம்பவும் அழுதுவிட்டார். ஊமை எனக்குத்தெரியாமல் திடீரென்று  எங்கேயோ வழி தெரியாமல் போய் காணாமல் போய் விட்டான். நான் தேடாத இடமில்லை. அவனுடைய அண்ணன்   ஒரு ஊரில் பள்ளிக்கூட வாத்தியாராக இருந்தான்.
நீ மாற்றலாகி போனதும்  ஊமைக்கும் வயதாகி விட்டது, எப்படியும்  
பெரியவன் ஒரு வேளை சாப்பாடாவது போடுவான்,இரக்கப்படுவான் என்று போனேன். 
ஆனால் அண்ணன் ஊமையை சத்தம் போடுகிறான்,ஓடுகிறான்,
என்னால் அவனுக்கு சாப்பாடு போட்டு முடியவில்லை என்று அடிக்கடி ரூமுக்குள், உள்ளே வைத்து பூட்டியதாலும், இன்னும் சில இம்சைகளாலும் அவன் அடிக்கடி காணாமல் போவதும் வருவதுமாக இருந்தான். அப்படி ஒருமுறை போனவன் ஒரேயடியாக போய் விட்டான், என்றாள்.
பாட்டி சாத்தூரில் இருந்த பொழுது என்னிடம் தன் பெரிய பிள்ளையிருப்பதை சொன்னதே இல்லை. பாட்டியிடம் ஏன் என்னிடம் உங்கள் பெரிய பையனை பற்றி சொல்லவில்லை என்று கேட்க முடியவில்லை. 

பாட்டி என்னிடம் நான் உனக்கு ஒத்தாசையாக எல்லாம் செய்துகொண்டு 
உன்னோடவே  இருக்கேன், என்னைப் போகச் சொல்லிவிடாதே என்றார்.
மிகவும் அழுதார்கள். எனக்கு பாவமாக இருந்தாலும்  என்னால் எதுவும் செய்ய 
முடியாத நிலமை. பார்க்க பாவமாக இருந்தது. 
நல்ல வேளை  வெளியிலிருந்து இவர் வந்தார். பாட்டியை பார்த்த உடனே புரிந்து விட்டது. பாட்டியை சமாதானப்படுத்தி  எங்களால் ஓரளவுதான் உதவமுடியும் என்று சொல்லி 
பாட்டி கையில் சிறிதளவு பணமும் இரண்டு நார்மடிபுடவையும் கொடுத்து 
பாட்டியை அனுப்பி வைத்தோம்.

இப்படித்தான், வாழ்க்கையில் கையாலாகாத்தனத்தினால் 
நிறைய உதவமுடியாமல் ஆகிறது.  பாட்டி கண்ணிலிருந்து மறையும்  வரை 
பார்த்துக் கொண்டிருந்தேன். மனது கனத்தது. 
மறக்க  முடியாத அந்த ஊமையையும் பாட்டியையும் நினைத்து
என் மனம், ஆறாமல், அழுது கொண்டுதான் இருக்கிறது.


Tuesday, January 13, 2015

மதுரை 60 வருடங்ளுக்கு முன்பு



ஸ்வாமி புறப்பாடு


மதுரையில் ஸ்வாமி புறப்படும் முன்பு முதலில் கோவில்மாடு, முதுகில்  முரசுடன் வரும்.
டம் டம் என்று சத்தம் கேட்ட உடன் ‘வாசலில் சாமிவரப்போறது’  என்று எல்லாரும் சுறுசுறுப்பாக  வேலைகளை முடிப்போம்.
அரை மணிகழித்து வேட்டுசத்தம் வரும். சிÈ¢து நேரத்தில் குட்டிப்பல்லாக்கில் சின்ன பிள்ளையார் வருவார்.
அவர் எப்போதும் பட்டு வேஷ்டியுடன் அலங்காரத்துடனயே    இருப்பார்.
அவரை, அப்படியே கொண்டு வரவேண்டியதுதான். அடுத்து    முருகன் தங்ககுதிரை வாகனத்தில் ÅÕÅ¡÷.
பிள்ளையார் முருகனுக்கு  பின்னால் மெதுவாக பிரியாவிடையும் சுந்தரேசரும் வருவார்கள்.
அதுவும் இதேபோல் ரொம்ப அழகாக இருக்கும்.
அப்படி வரும்போது  அந்த மாலையுடன் இருக்கும் பொம்மைகள் சரியாக வந்து நின்றவுடன் பொம்மையை  கீழே இறக்குவார்கள்.
அது அப்படியும் இப்படியும்,  ஆடிக்கொண்டே, கையில் மாலையுடன் கீழே இறங்கி பிரியாவிடைக்கும் சுந்தரேசருக்கும் மாலைகளை  போட்டுவிட்டு ஆடிக்கொண்டே மேலே போய்விடும்.
திரும்பவும் தனி மீனாட்சி  வரும்போது, அதேபோல மீனாட்சிக்கும்    மாலை போடும். இதை பார்க்கவே  தெருவின் இரண்டு சாரியிலும்    கூட்டம், பதினோருமணி அளவிலும் நிற்கும். கண்ணாடியில் மீனாட்சி ரொம்ப அழகாக தெரிவாள்.
அப்பொழுதுதான் பூப்பல்லாக்கு பார்த்த உணர்வு உண்டாகும் .
பிறகு ஆவணிமாதõ புட்டுத்திருநாளென்றால் மாணிக்க வாசகர்
வெள்ளிக்குதிரையில் வருவார். சித்திரை  திருநாளில் அவர்  வரமாட்டார்.
இதேபோல அழகரும் தல்லாகுளத்திலிருந்து புஷ்பபல்லாக்கில் வண்டியூர் போவார்.


மீனாட்சி கோவில்

 
மதுரையில் அந்தகாலத்தில் கோவிலை சுத்தி நிறைய வீடுகள்    இருக்கும். வடக்குமாசி மேல மாசிவீதிகளில் எல்லாம் நிறைய சந்தைகளும்  இருக்கும்.
கோவில் பக்கத்திலுள்ள சித்திரை வீதிகளில் கடைகளுக்கு நடுவிலும் வீடுகள் இருக்கும். கோவிலை சுத்தியுள்ள வீடுகள்  அநேகமாக ஒண்டு குடித்தனமாக  இருக்கும். சில தனி  தனி  வீடுகளும் உண்டு. நிறைய ஸ்டோர்களும் இருக்கும். ஸ்டோர் என்றால் கடைகள் இல்லை. அதாவது, ரெண்டு பக்கமும் வரிசையாக ஒரேமாதிரி பத்து வீடுகள்  இருக்கும். நடுவில் வராண்டா மாதிரி நடைபாதை, மறுபுறமும் எல்லை
இருக்கும்.  எல்லாருக்கும் பொதுவாக கீழே இருப்பவர்களுக்கு தனியாகவும் மாடியில் இருப்பவர்களுக்கு தனியாகவும், லெட்ரின்கள், பாத்ரூமகள் இருக்கும்.
நான் எழுதுவதெல்லாம் அறுபது வருடத்திற்கு முந்தின மதுரை. கோவிலை சுத்தியுள்ள இடத்தை எல்லாம்  Town என்பார்கள்
Townஹால் ரோடே நீளமாக இருக்கும்.
மதுரையில் கோவிலை சுத்தியுள்ள வீடுகளில் இருப்பவர்கள் எல்லோருமே வீட்டு வேலைகளில் ஒன்றாக கோவிலுக்கு தினமும் வருவதை வைத்துக்கொண்டிருப்பார்கள். எல்லாருமே கட்டாயம். ரெண்டுவேளையும் வருபவர்கள்தான்   முடிந்த போதெல்லாம்  அர்த்தஜாம பூஜைக்கும் வருவார்கள்.
இந்த காலம் மாதிரி டீவி கிடையாது. நிறைய வீடுகளில்    ரேடியோகூட இருக்காது.
அர்த்தஜாமத்தில், மீனாட்சி சந்நிதியில் இருக்கும் பள்ளி அறையில்  வெண்கலத்தால் இரு பக்கமும்  பெரிதாக, உயரமாக இரண்டு பாவை  விளக்குகள் இருக்கும்.
மூன்று பித்தளைப்படிகள் இருக்கும். பள்ளியறை கதவு முழுவதும் பித்தளை தகடு. கதவு திறந்தவுடன் உள்ளே சின்ன. தொட்டில் போல்  ஊஞ்சல். வெண்கல கம்பியில் மாட்டி இருக்கும் சுந்தரேச்வரரையும்  மீனாட்சியையும், ஊஞ்சலில் வைத்து லேசாக ஆட்டுவார்கள். வெளியில் வீணை வாசிப்பார்கள், தேவாரம்பாடி  கற்கண்டு போட்டு பால் நைவேத்யம் பண்ணி தீபாராதனை காட்டுவார்கள். எல்லாருக்கும் ப்ரசாதம் தருவார்கள்.
தினமும் மீனாட்சி  கோவிலுக்கு கட்டாயம் போகணும்  என்பதற்காகவே நிறைய பேர்கள் விலைசுற்றியே குடியிருப்பார்கள். நிறைய சௌகரிய குறைகளையும் பொறுத்துக்கொண்டு நாங்களும் அப்படித்தான் இருந்தோம். சாமி சந்நதியிலிருந்து வீரவசந்தமண்டபம் வழியாகவந்தால், மங்கயற்கரசி மண்டபம்.
அங்கு ஆயிரங்கால் மண்டபம் இருக்கும்.
அந்த மண்டபத்தை அந்த காலத்தில் எல்லாரும் உள்ளே போய் பார்க்கலாம். மண்டபத்தின் வெளி தூண்களிலேயே பெரிய குதிரை வீரர்களின் சிலைகள்  இருக்கும். குதிரை வீரர்களின் கைகளில் கயறு, குச்சி எல்லாமே தத்ரூபமாக இருக்கும். குறவன் குறத்தி கையில்  ஓலைக்கூடை இருக்கும். மண்டபத்தின் உள்ளேயும் எல்லா தூண்களிலும் அற்புதமான சிலைகள் இருக்கும்.


மண்டபத்தின் நடுவில், நடராஜர் சிலை இருக்கும்.
அந்தசிலைக்கு மார்கழி மாதம் அபிஷேகம் பூஜை எல்லாம் நடக்கும். மார்கழி மாதம்  திருவாதிரை அன்று, நடரஜரைப் பார்க்க, காலை ஐந்து மணிக்குள்  எல்லாரும் வந்து விடுவார்கள். ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து  ராஜகோபுரம் வழியாக. வெளியே வந்தால் எதிரே ஏழுகடல்  இருக்கும்.

அதற்கு மதுரையில் ஒரு கதை சொல்வார்கள்.
மீனாட்சியின் அப்பா, மலையத்வஜ பாண்டியராஜன் ஸ்வர்க்கம் அடைந்தவுடன்  மீனாட்சியின் அம்மா, காஞ்சனமாலை மிகுந்த வருத்தமடைந்து  இருந்தபோது  சுந்தரேசர் அவரிடம் “உங்களுக்கு
இப்போது என்னவேண்டும்”  என்று கேட்ட்டாராம். 
காஞ்சனமாலை “ஏழு கடலிலும் ஸ்நானம் செய்யுணும்னுதான் எனக்கு ஆசை”, என்றார். உடனே சுந்தரேசர், அந்த குளத்தில், ஏழு கடலும் பொங்கி வரும்படி அனுக்ரஹம் பண்ணினாராம்.
காஞ்சனமாலை, ஏழுகடல் குளத்தில் இறங்கி ஸ்நானம் பண்ணிய  உடன்  மலையத்வஜ பாண்டியன் மேலுலகத்திலிருந்து ரதத்தில் வந்து, காஞ்சனமாலையை, ஸ்வர்க்கத்திற்கு அழைத்துப்போய் விட்டதாக  சொல்வார்கள்.

அப்போதெல்லாம் அந்த குளத்தில்  தண்ணீர் இருந்தது   இப்போது ஒரே குப்பையாக இருக்கு. “காஞ்சனமாலைக்கு மாப்பிள்ளை வாய்த்தாற்போல் யாருக்கு வாய்க்கும்” என்று மதுரையில் சொல்வார்கள்.

அஷ்ட லட்சுமி. மண்டபம் தாண்டி புது மண்டபம். இருக்கும்.
இதை வசந்த மண்டபம் என்றும் சொல்வார்கள். இது திருமலை நாயக்கரால்  கட்டப்பட்டது. என்றும் சொல்வார்கள்
இருபத்துரெண்டு வருடமாக கட்டியதாக சொல்வார்கள். அந்த மண்டபத்தின் நடுவில், மார்பிளால். மீனாட்சிக்கும் சொக்கருக்கும் ஆசனம் அமைந்து உள்ளது.
அங்குதான் வசந்தோற்சவத்தின்போது வைகாசித்திருநாள் நடக்கும்.அந்த மையமண்டபத்தைச்சுற்றி. நாலு புறமும் நிறைய கடைகள் இருக்கும்.
ஒருபக்கம். முழுதும் பித்தளை பாத்திரங்கள் வெண்கலபாத்திரங்கள்.  இரும்பு தோசைக்கல், சேவைநாழி, என்று சகல  சாமான்களும் கிடைக்கும். பாதை மிகவும் குறுகலாக இருக்கும்.
இன்னொருபக்கம்  வளையல்கள். கல் பதித்த கவரிங் நகைகள். இப்படி நிறைய இருக்கும். ஒருபக்கம்  தைப்பதற்கு வேண்டிய தையல் சாமான்கள் மட்டும் இருக்கும்.
ஒருபக்கம் தையல்காரர்கள் நிறைய இருப்பார்கள். தேருக்கு வேண்டிய தொம்பை முதலிய அலங்கார துணிகளை தைத்துக் கொண்டிருப்பார்கள் இந்த மண்டபத்தூண்களில் மதுரையை ஆட்சி
செய்த விஸ்வநாத நாயக்கர், திருமலை நாயக்கர், அந்த ராஜாக்களுடைய ராணிகள், பெரிய காளி சிலை, நிறைய யாளிகள் குதிரை வீரர்கள், அவர்கள் தோளில் குதிரைகள் தன்  குளம்பை வைத்துக்கொண்டு கம்பீரமாக நிற்கும் சிலைகள் இருக்கும்.


மதுரையை சுற்றிஉள்ள மற்ற கோவில்கள்
 


மதுரையை சுற்றி நிறைய கோவில்கள் இருக்கும். அதில் சுந்தர ராஜபெருமாள்கோவில் ரொம்ப ப்ரசித்தம். அந்த கோவிலில்தான் பெரியாழ்வாருக்கு சுந்தர் ராஜபெருமாள், கருடவாஹனத்தில்  காட்சி கொடுத்தார்.
அந்த சமயம் தான் பெரியாழ்வாரை பாண்டிய ராஜா யானையில்  உட்கார்த்தி வைத்து பூர்ணகும்ப மரியாதையுடன் அழைத்து வந்தான்.

அப்போதுதான் கோவிலுக்குள்அவருக்கு பெருமாள் தரிசனம் கிடைத்தது. அப்போது அவர் 
 “பல்லாண்டுபல்லாண்டு.
பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரமாண்டு
திண்தோள் மணிவண்ணாநின்
சேவடிசெவ்விதிருக்காப்பு”
என்ற திருவாய் மொழியை பாடினார்.

இம்மையிலும் நன்மைதருவார் கோவிலில் உள்ள பைரவர்  ரொம்ப சக்தியுள்ளது, என்பார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு, இன்னும் இரண்டு நாளில் உலகம் அழியப்போகிறது, என்ற செய்திபரவி மதுரையே பயந்து நடுங்கியது. இப்பல்லாம் என்றால் எல்லாரும் சிரித்துக்கொண்டு போகிறார்கள் அப்போது இவ்வளவு விவரம் இல்லாத மக்களாக அப்பாவிகளாக இருந்தார்கள். அதனால் ரொம்ப பயந்தார்கள். அப்போது மஹா பெரியவர்சந்திர சேகர ஸ்வாமிகள் “எல்லோரும் மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார்  கோவிலில் உள்ள நவக்ரஹத்தை தினமும் இரண்டு வேளையும் ஒன்பது தடவை ப்ரதக்ஷணம் பண்ணுங்கோ, ஒண்ணும் ஆகாது. எல்லாரும் க்ஷேமமாக இருப்பீர்கள்”. என்றார். உடனே மதுரையே நன்மைதருவார் கோவிலில் கூடிவிட்டது. ப்ராகாரம் கொள்ளாமல் கூட்டம்.
அதிலிருந்து அந்த கோவில் உலக ப்ரசித்தியாகிவிட்டது.
அப்போதுதான் “வேயுறு தோளி  பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணைதடவி” என்ற தேவாரத்தை  எல்லாரையும் பாராயணம் பண்ண சொன்னார். அப்போது அந்த தேவாரப்பாட்டு, அத்தனை  பேருக்கும் பாடமாயிற்று.

மதுரையை சுற்றி திருப்பறங்குன்றம் பழமுதிர்சோலை நரசிங்கம்  திருமோகூர், திருவாதவூர் இருக்கிறது.
மாணிக்கவாசகர்  பிறந்த ஊர் திருவாதவூர். அங்கே அவர் வாழ்ந்த அரண்மணை இருக்கிறது.  அதைப்பற்றி  சுமாராகத்தான்  என்னால்   எழுதமுடியும்.
அந்த திருவாதவூரில், கோவில் ரொம்ப பெரியது. எனக்கு தெரிந்து பலவருடங்களாக பெரிதாக இரண்டு மகிழமரங்கள் இருக்கிறது. பூவாக சொறிந்து கொண்டு, ரொம்பவும் பழமையான கோவில்களில்  அதுவும் ஒன்று.
மதுரையில் காலை வேளையில் எல்லோரும் அநேகமாக சுறுசுறுப்பாய்த்தான் இருப்பார்கள். காலை  நாலுமணியிலிருந்தே இருட்டும் வெளிச்சமுமாக  இருக்கும்.
பொழுது புலர்ந்தும் புலராமலும்   இருக்கும்போதே எல்லார் வீட்டு வாசலிலும் சடசட என்று  சாணிதெளிக்கும் சத்தமும் பெருக்கும் சத்தமும் கேட்கும்.
அழகழகாக வெள்ளைவெளேரென்று  கோலமும்  ஸ்ரத்தையாக போடுவார்கள்.
மாடும், கன்றுமாக பால் கறப்பதற்காக சில வீடுகளின் வாசல்களில்  கட்டி இருப்பார்கள்.அந்த காலை ரொம்ப அழகு.
அந்த காலத்தில், மதுரையில், குதிரை  வண்டியும் கைரிக்‌ஷாவும் தான்.


மதுரை அழகர்கோவிலை  மறந்து  விட்டேனே! அதை பற்றி பின்னர் எப்பொழுதாவது எழுதுகிறேன்.
 





மதுரை மாவடு


அங்கு கோவிலும் உசத்தி, மாவடுவும் உசத்தி. மதுரை அருகிலுள்ள பெரியகுளத்தின் பக்கத்திலுள்ள கும்பக்கரை  வடுவும் உசத்திதான்! மாவடு சீஸன் பங்குனிமாதம் ஆரம்பிக்கும்.
பங்குனிக்கு முன்பே மாவடு வர ஆரம்பித்துவிடும். மாவடு சீஸன் வந்து  விட்டால் மதுரை மக்களுக்கு சந்தோஷம் தாங்காது. மதுரையே    மணக்கும். மாவடு  விற்பனை மட்டும்  ஸ்பெஷல். காலை வேளை நாலு.   மணி வாக்கில் விடிந்தும் விடியாமலும் இருக்கும்போதே தெருமுக்கில்  ரெண்டு ஆண்கள், ரெண்டு பெண்கள் நின்று கொண்டு, “மாவடு. மாவடு” என்று பெரிசாய் சத்தம் கொடுப்பார்கள்.
வீட்டுக்குள் இருக்கும் மாமிகள், பதறி அடிச்சுண்டு கையோடு கூடைகள், பணம், எல்லாவற்றோடும்,  தூக்கம் கலைந்தும்  கலையாமலும் வந்து சூழ்ந்து கொள்வார்கள்.
சில கணவன்களும் வருவதுண்டு. ரெண்டு வித மாவடுக்களை வைத்துக்கொண்டு, அந்த நாலு பேறும் அப்படி ஒரு பேரம் பேசி எல்லாரையும் குழப்புவார்கள்.
அப்போல்லாம் படிதான். இப்பவும் தெருவில் விற்கும் மாவடுவிற்கு படிதான். ஐந்துபடிக்கு குறையாமல் வாங்கினாலதான் விலைபேச வருவாள். மாவடுவை  தொடக்கூடாது. தொட்டால்,”ஏ! தொடாதே! அது பவுனு! நா எடுத்து காமிக்கிரேன்” என்று கூறுவார்கள். “உடைத்து பாரு
மஞ்சநாரியே இருக்காது அத்தனையும் அருமையான வடு” என்று  என்னனமோ பேசி, எல்லாரையும் 5 படிக்கு குறையாமல் வாங்கும்படி பண்ணிவிடுவார்கள். விற்ற பிறகு ரொம்ப சிநேகிதமாக  பேசி  கதையளந்துவிட்டுப் போவார்கள். அவர்கள் போன உடன்
மழை பெய்து ஓய்ந்தாற்போல் இருக்கும். அப்போதெல்லாம்  வருடாவருடம் இதே கதைதான்.
 சிலபேர் தளவாய் அக்ரஹாரத்திற்கே காலை நாலுமணிக்கேபோய்
மாவடு லாரி வருவதற்கு காத்திருந்து கொஞ்சம் மலிவென்று வாங்கி வருவார்கள். எத்தனையோ காய்கள் ஊருகாய் போடுவதற்கு    இருக்கிறது. ஆனால் ஏன் இந்த மாவடு மட்டும் எல்லாரையும் பைத்தியமாக அடிக்கிறது என்று தெரியவில்லை.
எல்லாரும் நீங்க வடு போட்டாச்சா என்று கல்யாணமாச்சா என்று விசாரிப்பதுபோல் கேட்டுக்கொள்வார்கள். தளவாய் அகரஹாரத்தில்தான் மொத்த காய்களும்
வரும். வாழைக்காயிலிருந்து பலாப்பழம் வரை சகலமும் அங்கு கிடைக்கும். இப்போதெல்லாம் சென்னையில் பழமுதிர்சோலையில் யார் வேணாலும் எப்படி வேணாலும் சிகப்பு காம்புவடுவை பொறுக்கி வாங்கலாம்.
வடு வாங்கும்போது சிவப்பு காம்பாக பார்த்து வாங்கணும். அதான் மலைவடு.
மதுரையில் காலை ஆறுமணிக்கெல்லாம், கீரையிலிருந்து வாழைப்பூ, வாழைத்தண்டு, இலை, வெற்றிலை. எல்லாம் சோழவந்தானிலிருந்து வரும். எல்லாம் தெருக்களில் விற்க வந்து விடும்.
 

மதுரை பாட்டுக்கச்சேரி


மதுரையில் மதுரைசேஷகோபாலன், அவனுடைய நண்பன் வன்மீகநாதன் இருவரும் மீனாட்சி கோவிலில் ஆடி வீதியைலிருக்கும் திருப்புகழ் மண்டபத்துக்கு திருப்புகழ் கற்றுக்கொள்ளவருவார்கள். ஆடி வீதியில். உட்கார்ந்து அவர்கள்பாடும் திருப்புகழை
கேட்போம்.
அப்பவே  அழகாக பாடுவான். ஆத்துக்கு வரும்போதெல்லாம் நண்பனோடு வருவான் திருப்புகழ். பாடுடா என்றால் உடனே நண்பனுடன் சேர்ந்து பாடுவான். அவர் இப்போது ப்ரபல பாடகர். மதுரை க்ருஷ்ணன், மதுரை மணிஅய்யர் எம் எஸ் சுப்பலெட்சுமி.  மதுரைசோமு, எல்லாரும் மதுரை தந்த செல்வங்கள்

அந்த காலத்தில் ஆடி வீதியில் மதுரைசோமு, க்ருபானந்த  வாரியார் புலவர்  கீரன் அவர்கள், சிவானந்த விஜயலட்சுமி, பத்து வயது வீணை காயத்திரி எல்லாரும் வந்து அடிக்கடி. கச்சேரி பண்ணுவார்கள்.
ஆடி வீதியில் எல்லாரும் காத்தாட உட்கார்ந்து  சந்தோஷமாக கேட்போம். நல்ல கூட்டம் இருக்கும். காலை நீட்டிக்கொண்டு ஜாலியாக, ஏனென்றால் பைசா செலவு கிடையாது!
இதெல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கதையாகப்போனதை
கதையாக எழுதியுள்ளேன்.
நிறைய தவறுகள் இருக்கலாம்.
மதுரையைபற்றி எழுத எழத, நிறைய இருக்கு.  உங்களுக்கு  சிறிது ஓய்வு கொடுப்பதற்கு இத்துடன் நிறுத்திக்கொண்டுள்ளேன்.